சனி, 18 டிசம்பர், 2021

பாசறைச் சிங்கம் பகவத்சிங் !

 


நீராவி எப்போதும் என் பார்வையில் ஒரு புத்தகப் புழுவாகத்தான் தெரிந்தார்.

நீராவி என்கிற பெயா் ஏதோ வித்தியாசமாக தெரிகிறதா? அது, அவரது பெற்றோர்கள் வைத்த பெயா்தான். அவரது குல தெய்வமான நீர் காத்தலிங்கம் என்பதின் சுருக்கம் தான், நீராவி!

அவர் யாரைச் சந்தித்தாலும் புத்தகத்தைப் பற்றியே தான் பேசுவார். புத்தகம் படியுங்கள். புத்தகம் படியுங்கள் என்று சதா அறிவுரைகள் வழங்குவார். அவரை தெரிந்தவா்கள் மத்தியில் அவருக்கு வைத்திருக்கும் பட்டப்பெயா் புத்தகப் பைத்தியம்.

தமிழ்வாணணுக்கு கறுப்புக் கண்ணாடி எப்படி அடையாளமோ? அப்படிதான், நீராவிக்கு அவரது தோளில் தொங்கும் ஜோல்னாப்பை. அதில் எப்பவும் நான்கு அல்லது ஐந்து புத்தகங்களாவது இருக்கும்.

அவருடன் பேசும்போது, அவர் நினைத்தது மாதிரி நாம் மிகச்சரியான பதிலையோ அல்லது தகவலையோ சொல்லிவிட்டால் போதும் "யெ...ஸ்..." என்று காட்டுக் கத்தல் கத்துவார். நாம் இப்படி காட்டு கத்து கத்துறோமே அருகில் இருப்பவா்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய கூச்சமோ நாச்சமோ அவருக்கு இருந்ததில்லை..

நீராவிக்கு கோபம் வந்துவிட்டால், அவரது வயதான தோற்றத்திற்கும் கோபத்திற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பயங்கரமாகத் தெரிவார்.

நான் எத்தனையோ முறை அவரிடம் சொல்லிவிட்டேன்.

"ஐயா, எனக்கு புத்தகம் படிக்கிறதெல்லாம் பிடிக்காது. நானொரு சாப்பாட்டு ராமன். அதிலும் அசைவப் பிரியன். நீங்களோ புத்தகப் பிரியா். எனக்கும் உங்களுக்கும் எப்போதும் ஒத்துவராது. என்னை உங்களோடு எங்கேயும் வரச்சொல்லி வற்புறுத்தாதீங்க".

அந்த மனுசரும், என்ன சொல்லியும் கேட்க மாட்டேனுட்டு திரும்பத் திரும்ப என்னை கூப்பிடலாமோ?

இன்றும் அப்படித்தான் அவரிடம் மாட்டிக்கொண்டேன்.

டீக்கடையில் என்னைப் பார்த்ததும், "என்னங்க கண்ணன் இன்னைக்கு வேலைக்கு எதுவும் போகலையா?"

தினசரி பேப்பா் படிக்கும் மும்பரத்தில் "ஆமாங்க ஐயா" என்று பதில் சொல்லி தொலைத்துவிட்டேன். வந்தது வினை!

"பச்சையப்பன் காலேஜ்க்கு எதிரில் புத்தகக் கண்காட்சி நடக்குது. நீங்களும் வாங்க ஒரு எட்டு பொயிட்டு வந்துடலாம்".

திடுக்கென்றது எனக்கு!

தப்பிக்க என்ன வழி?

ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இனிமேல் எங்கே பார்த்தாலும் என்னிடம் பேசாதவாறு கோபமாக எதையாவது பேசிடலாம்.

"ஐயா, என்னெ தயவு செய்து ஆள விடுங்க. டிரான்ஸ்போர்ட்டுல கண்டக்டரா வேலை செய்து ரிட்டையிடு ஆயிட்டிங்க. உங்க செலவுக்கு பென்சன் பணமிருக்குது. பஸ்ல போறதுக்கும் பஸ் பாஸ் இருக்குது. என்னோட நிலைமை அப்படியில்ல. உங்களுக்கு பொழுது போகலங்கிறதால, நீங்க தொட்டுக்க ஊறுகாய் நானில்ல! ஆள விடுங்க".

கடகடவென அவர் முகத்தை நேருக்கு நேரா பார்க்காமலே சொல்லி முடித்தேன்.

"கண்ணா நீங்க புத்தகம் வாங்க வேண்டாம். எனக்கு ஒரு பேச்சு துணைக்கு வாங்களேன்".

இவரு என்ன மனுசன், என்னெ இப்படியா வறுத்தெடுத்து உலையில போடுவாரு.

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் பிரசங்கம் செய்ய தொடங்கிவிட்டார்.

"கண்ணா, நான் கண்டக்டா் வேலையில இருக்குறப்போ தொழிற்சங்க தலைவரா இருந்தேன். தொழிலாளா்களோட பிரச்சனைகள், அதிகாரிகளோட அதிகார மமதைகள், குடும்பப் பொருளாதார நெருக்கடிகள், குடும்பச் சிக்கல்கள், கடன் தொல்லைகள், இத்தனைக்கும் நடுவிலேயும் நான் ஒரு நாள் கூட புத்தகம் வாசிக்காமல் இருந்ததில்லை. புத்தகம் படிக்கிறது எவ்வளவு சுகமானது தெரியுமா? ஒரு புத்தகம் படிக்கிறது ஆயிரம் ஆசிரியா்கள் சொல்லித்தறதுக்கு சமம். புத்தகம் படிக்கும்போது அதை எழுதியவரோடு உட்கார்ந்து பேசுறது போலவே இருக்கும், தெரியுமா? நீ ஒரு முறை படிச்சுப்பாரு அப்போ புரியும் நான் சொல்லுறது உண்மையா? இல்லையான்னு!.

அவர், பேசப் பேச எனக்கு நெருப்புல நிக்கிற மாதிரியே இருக்கு.

அப்பாடி! நாங்க, இறங்க வேண்டிய பச்சையப்பன் காலேஜ் பஸ் ஸ்டாப் வந்துருச்சு.

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜனக்கூட்டம் சமுத்திரம் போல் பரவி இருந்தனா்.

நீராவியின் தொல்லையிலிருந்து விடுபட நினைத்தேன்.

நீராவியின் பார்வையிலிருந்து விலகி ஜன சமுத்திரத்தில் கலந்து, ஒரு புத்தக ஸ்டாலுக்குள் நுழைந்து, ஒருவழியாக அப்பாடா! என்று நிம்மதி பெரு மூச்சு விட்டேன்.

புத்தக ஸ்டாலுக்குள் திரும்பிய பக்கமெல்லாம் புத்தகங்கள் வரிசையாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

சிறுவா்களுக்கென்றே ஒரு பிரிவு, மாணவர்களுக்கென்றே ஒரு பிரிவு, சிறுகதைகள், நாவல்கள், கவிதை, சினிமா, நாடகம், தன்னம்பிக்கை,ஆன்மிகம்,ஆராய்ச்சிகளுக்கென்று,எத்தனை எத்தனை தலைப்புகள்,எத்தனை எத்தைனை புத்தகங்கள்.

புத்தக ஸ்டாலுக்குள் புத்தகங்கள் அதிகமா? புத்தகங்கள் வாங்க வந்துள்ள ஜனங்கள் அதிகமா? யூகம் செய்ய முடியவில்லை.

எனக்குப் பார்க்க பார்க்க பிரமிப்பு!.ஏதோ ஒரு புது உலகத்துக்குள் பிரவேசிக்கிறேனோ?

புத்தகங்கள் எடுத்து படித்துப் பார்க்கிறார்கள்.தோ்ந்தெடுத்தப் புத்தகங்களை கைகளில் அடுக்கிக் கொண்ட அவர்களது லாவகம். என்னையும் பார்க்கிறேன்.வெட்கம் என்னை பிடிங்கித் தின்னது. என்னை அறியாமலே ஒரு புத்தகத்தை எடுத்தேன். படிப்பது போல் பாவணை செய்ய நினைத்து, மெல்ல மெல்ல படித்துப் பார்த்தேன்.

பகத்சிங்கின் குடும்பத்தில் அனைவருமே நாட்டின் விடுதலைக்குத் தங்களை தந்தவர்கள். பகத்சிங்கின் தந்தை கிஷன்சிங், அவருடைய சகோதரா் அஜுத்சிங், பாட்டனார் அா்ஜீன் சிங், அனைவருமே நாட்டு விடுதலைக்கு போராடியவா்கள். வழி வழியாக ஏறத்தாழ ஜமீன்தார் குடும்பம் தான்.

தாய் வித்யாகெளா் மடியிலே குழந்தையை கிடத்தி இவன் அதிர்ஷ்டக்காரன் என்று சொல்லி,பகத்சிங் என்று பெயர் சூட்டுகிறார்கள். பனிரெண்டு வயது பகத்சிங் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்க சபதமேற்கிறார்.

தூக்கிலிடப்பட்ட போது பகத்சிங்கின் வயது இருபத்தி முன்று.

அவா்,கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்: என் முகத்தை கறுப்புத் துணியால் மூடி, மரணத்தைக் கண்டு பயப்படும் கோழையாக்கி விடாதீா்கள்!. என் மூச்சு நிற்கும் வேளையில் என் தாய் மண்ணைப் பார்த்தவாறே மரணத்தைத் தழுவ விரும்புகிறேன்.

படிக்கும் வார்த்தைகள் என் உடலில் ஏதோ செய்கிறது!.புத்தகத்தை மூடி விட்டு ஒரு கணம் கண்ணை மூடினேன்.

பகத்சிங் தோற்றம் தெரிந்தது!

மெல்ல கண்ணைத் திறக்கிறேன்.

என் எதிரே நீராவி நிற்கிறார்!

இப்படியானவர்களால் தான் அல்லது இப்படியானவா்கள்தாம் பகத்சிங்காக மாற முடியுமோ?

ஆ! அவா் சுதந்திரப் பாசறைச் சிங்கம்; இவா் சுகமான படிப்புலக பகவத்சிங்!.

நாளை...?

 

அணில்,ஆடு,இரக்கம்!

 


அணிலுக்கு மனது சரியாயில்லை!

விடிந்தால் பக்ரித் பண்டிகை. பண்டிகைதின சந்தோஷம் சிறிதுமின்றி காணப்பட்டான்.

அவனது மனது முழுவதும் அந்த ஆடு பற்றிய சிந்தனை தான்!

அணில் முகமதுவை எல்லோரும் அணில் என்று தான் அழைப்பார்கள்.

அணிலின் வாப்பா கறீம் பாய் இராமநாதபுரத்திலிருந்து தேடிப்பிடிச்சு பக்ரித் பண்டிகைக்காக வாங்கிவரப்பட்ட செம்மறி ஆடு தான், அந்த ஆடு!

கொம்புகள் இரண்டும் நன்கு வளர்ந்து சுருண்டு சுருள் வடிவில் பக்க வாட்டில் நீண்டிருந்தது.

குறுகிய வால்!

அடர்த்தியான அதிக சுருள்களை கொண்ட வெள்ளை நிற உரோமம் கொண்டிருந்தது. பக்ரித் பண்டிகைக்கு ஆடு வெட்டிய பிறகு வெள்ளை நிறம் உரோமம் கொண்ட ஆட்டுத்தோலுக்கு தான் சந்தைகளில் அதிக மதிப்பு இருப்பதால் வியாபார நோக்கோடும் கறீம் பாய் தனது மொத்த அனுபவ அறிவோடு அந்த செம்மறி ஆட்டை தேர்ந்தெடுத்து வாங்கிவந்திருந்தார்.

அந்த ஆடு வீட்டுக்கு வந்ததிலிருந்தே அணில் வீட்டில் சந்தோஷம் எங்கும் நிரம்பியிருந்தது. அனைவருக்கும் கொண்டாட்டம். அனைவருமே ஆட்டை நன்றாக கவனித்துக் கொண்டனர்.

ஆட்டுக்கு குடிக்க தினமும் குடம் குடமாக தண்ணீர் வைப்பாள் அணிலின் தங்கை ஜரீனா. விலையுயர்ந்த ஷாம்பு போட்டு குளிப்பாட்டி துவட்டிவிடுவாள் அணிலின் அம்மா மெக்கருன்னிஷா. அந்த ஆடு படுத்திருக்கும் இடத்தை கூட்டி பெருக்கி சுத்தம் செய்திடுவார் அணிலின் நன்னி பாத்திமா.

தினமும் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பியதும் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் இரயில்வே புறம்போக்கு நிலத்தில் உள்ள புல்வெளியில் அந்த ஆட்டை மேய்ச்சிட்டு வருவான் அணில்.

அப்படியான முதல் நாளில், இரயில்வே புறம்போக்கு நிலத்திற்கு ஆட்டை மேய்ப்பதற்காக அந்த ஆட்டை அழைத்துச் செல்ல பெரும் பாடுபட்டுப் போனார்கள் அணிலும், அவனது வகுப்புத் தோழன் சிவாவும்.

“ வரமாட்டேன்“ என்று அடம்பிடிக்கும் அந்த ஆட்டை பின்புறமிருந்து தள்ளிக்கொண்டு சென்றான் சிவா. முன்புறமிருந்து கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் செல்ல படாத பாடுபட்டுப் போனார்கள்.

ஆடு தனது முன்னங்கால்களை முன்னோக்கி தரையில் பலம் கொண்ட மட்டும் .நன்றாக ஊண்டி நகர மறுத்தது.

அணிலுக்கு திடீர் யோசனை வந்தது!

ஆட்டின் கழுத்து கயிற்றை விட்டு விட்டு தரையில் ஊன்றிய ஆட்டின் கால்களை தன் கரங்களில் பிடித்து பின்னோக்கி இழுத்துக் கொண்டே சென்றான், அணில்.

ஒரு வழியாக மேய்ச்சல் இடத்திற்கு ஆடு வந்தாகிவிட்டது.

கழுத்தை தொங்கப்போட்டுக் கொண்டு எதையோ இழந்து தவிப்பது போன்று ஆடு புற்களை மேய மறுத்து அடம்பிடிக்கத் தொடங்கிவிட்டது.

அணிலின் தோழன் சிவா கை நிறையா நல்ல பசுமையான புல்லை பிடிங்கி வந்து ஆட்டின் வாயருகே தின்னக் கொடுத்தான். ஆடு முகத்தை திருப்பிக் கொண்டது.

சிவாவுக்கு தன் நண்பனின் முன்பு கௌரவ குறைச்சலாகி விட்டது.   

அணிலும் சிவாவும் எவ்வளவு போராடியும் அவர்கள் தோற்றது தான் மிச்சம் என்றாகிவிட்டது.

அந்திச் சூரியன் மறையத் தொடங்கியதும் இருவரும் சேர்ந்து அந்த ஆட்டை தள்ளிக் கொண்டும், இழுத்துக் கொண்டும் வீடு வந்து சேர்ந்தனர்.

சிறிது நாட்களில் அணிலின் மகுடிக்கு அந்த ஆடு மயங்கி விட்டது போலும்!

அணிலுக்கு பின்னாடியே பின்தொடர்ந்து செல்கிறது!

ஆட்டின் கழுத்தில் கயிறு கட்டப்படவில்லை. ஆட்டின் முன்னங்கால்களை பிடித்து அணில் தூக்கிச் செல்வதில்லை. அணிலின் பேச்சை ஆடு கேட்கத் துவங்கி விட்டது.

அணிலின் நடைக்கு பின் தொடர்ந்து ஆடு நடக்கும். அணில் நின்றால் ஆடு நின்றுவிடும்.

சில நேரங்களில் தேவையில்லாமல் அணில் வேண்டு மென்றே நிற்பான். ஆடு தப்பாமல் அப்படியே நின்றுவிடும்.

வாகனங்கள் செல்லும் சாலைகளை கடந்து தான் மேய்ச்சல் இடத்திற்கு செல்லவேண்டும். அவ்வாறு மேய்ச்சல் இடத்திற்கு செல்லும் போது சாலைகளை கடக்கும் போது வாகனங்கள் தன்னை கடக்கும் வரை அணில் சற்று நின்று காத்திருப்பான். அப்போது ஆடு நின்று காத்திருக்கும். வாகனங்களில் செல்வோர் பார்க்கும் போது ஆடு அணிலின் கைப்பிடித்து சாலையை கடக்க காத்திருப்பது போல் தெரியும். அது அவர்களுக்கு ஒரு அதிசயமாக தெரியும்.

இது அணிலுக்கும். அவனது வகுப்புத்தோழன் சிவாவுக்கும் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

சிறிது நாட்களாகவே தொடர்ந்து பெய்து வரும் தென் மேற்குப் பருவ மழை காரணமாக மேய்ச்சல் இடத்தில் ஒரு பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் சிறுவர்கள் நீச்சல் அடித்து தண்ணீரில் குதித்து நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

சிவாவுக்கும் குளத்தில் குதித்து விளையாட ஆர்வம் மனதில் பொங்கி வழியவும் தனது துணிமணிகளை கழட்டி கரைமேல் போட்டுவிட்டு தண்ணீருக்குள் குதித்ததும், மறு கணமே ஆடு தண்ணீருக்குள் குதித்தது. சிவாவும், ஆடும் தண்ணீருக்குள் நீந்தி வருவதை கண்டதும் அணிலும் தண்ணீருக்குள் குதித்து விளையாடத் தொடங்கினான்.

ஆடு தண்ணீருக்குள் குதித்து குதித்து நீந்தி கரையேறி மீண்டும் குதிப்பதை பார்க்கும் போது மற்ற சிறுவர்களுக்கு வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

சிறுவர்கள் அனைவரும் அந்த ஆடுக்கு பின்னாடியே அணில் வீடுவரை வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஆடுக்கும் அணிலுக்கும், சிவாவுக்கும் புதிய நண்பர்களாயினர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில்....

மாலை நேரம். சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள ஊஞ்சலில் அணில் அமர்ந்து கொண்டதும், சிவா ஊஞ்சலைப் பிடித்து சிறிது தூரம் முன்னோக்கித் தள்ளிக் கொண்டுபோய் ஊஞ்சலை விட்டு விட்டு பக்கவாட்டில் சிவா ஒதிங்கிக் கொண்டதும் ஊஞ்சல் பலமுறை ஆடி நிற்கத் தொடங்கும் போது நொடிப் பொழுதில் ஊஞ்சலை ஆடு தன் தலையில் முட்டிக்கொண்டு சிறிது தூரம் வரை தள்ளிக்கொண்டு போய் விட்டு விட்டு பக்க வாட்டில் ஒதிங்கிக் கொண்டதும் வேடிக்கை பார்த்த சிறுவர்கள் புதிய நண்பர்கள் என எல்லோரும் கை கொட்டி ஆரவாரம் செய்தனர்.

சறுக்கு விளையாட்டு கூடாரத்தில் உள்ள இரும்பு படிகட்டுகளில் ஏறி உயரத்துக்குச் சென்றதும் மறு முனையில் சறுக்கி கீழே வந்தார்கள் சில சிறுவர்கள். அவ்வாறே ஆடு படிகட்டுகளில் ஏறிச் உயரத்துக்குச் சென்று தன் முன்னங் கால்கள் இரண்டையும் மடக்கிக் கொண்டும், பின்னங் கால்களை தோதாக மடக்கி அமர்ந்து கொண்டு சறுக்கி மெதுவாக தரையை வந்தடைந்தது. இதைக் கண்ட பூங்காச் சிறுவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர்.

அன்று--

மேய்ச்சல் இடத்துக்கு அருகே சிலர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டின் அருகே கால்பந்து வந்து விழுந்தது. உடனே அந்த கால்பந்தை லாவகமாக தன் தலையால் சற்று மேலே தூக்கி போட்டு ஓங்கி ஒரு முட்டு முட்டியதும் அந்த கால்பந்து விளையாடுபவர்களின் காலுக்கு தோதாக சென்று சேர்ந்தது.

அதிலிருந்து கால்பந்து விளையாடும் போதெல்லாம் விளையாட்டுக் களத்துக்கு வெளியே போய் விழும் கால்பந்தை அந்த ஆடுதான் தன் தலையால் முட்டி விளையாட்டுக் களத்துக்கு கால்பந்தை திருப்பிவிடும்!.அப்போது திடீரென்று ஆடு வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து ஈனஸ்வர குரலில் கத்தியது. ஆடுக்கு ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவனாக ஆட்டின் அருகே சென்றான் அணில்.

ஆடு தன் முன்னங்கால்களை மாறிமாறி தரையில் வாரிக்கொண்டு இன்னமும் ” மே... ”என்று இடைவெளியே யில்லாமல் கத்தியது. அப்போது ஆட்டின் அருகே பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று புல்வெளிக்குள் மறைந்ததை அணில் பார்த்து விட்டான். நல்லவேளை ஆட்டுக்கு வந்திருந்த விபரீதம் விலகியது.

ஆழ்ந்த யோசனையில் இருந்த அணிலை அவன் கண்ணில் பட்ட அந்தக் காட்சி அவனை சுயநினைவுக்கு கொண்டுவந்தது.

இரயில்வே ஒப்பந்த ராட்சத டிப்பர் லாரியிலிருந்து மலைப் போல் மண் சரிந்து உயர்ந்து கொண்டிருந்தது.

அருகில் தான் ஆடு மேய்ந்து கொண்டிருந்தது. அவன் எழுந்து சென்று ஆட்டின் கொம்பை பிடித்து இழுத்துக் கொண்டு டிப்பர் லாரி அருகே சென்றான்.

டிப்பர் லாரியிலிருந்து பின்புறமுள்ள கதவு கீழ்பகுதி அகலத் திறந்திருந்தது.அதன் வழியாகத்தான் மண் சரிந்து தரையில் விழுந்தது. மண் முழுவதுமாக கொட்டி முடித்ததும் டிப்பரின் பின் பகுதி மெல்ல மேல் நோக்கி சென்றுகொண்டிருந்தது. பின் கதவு திறப்பின் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

அவன் காத்திருந்த தருணம் வந்ததும் ஆட்டை லாரியின் பின் கதவு இடைவெளியில் தள்ளி விட்டதும் கதவு தானாக மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது.

டிப்பர் லாரி மெல்ல மெல்ல நகர்ந்து சிறிது தூரத்தில் சென்று மறைந்ததும் ஒரு தீர்மானத்தோடு வீடு திரும்பினான், அணில்.

அம்மா தான் முதலில் பார்த்தாள். ” என்னடா அணிலு நீ மட்டும் தனியா வறீயே? ஆடு எங்கே?”

பதில் ஏதும் சொல்லாமல் அவனது அறையை நோக்கிச் சென்றான்.

” என்னங்க... விடிஞ்சா பெருநாள் அதுவுமா ஆடு மேய்க்கப் போனவன் அணிலு வெறுங்கையோடு வாரான். கேட்டாக்க அவன்கிட்ட இருந்து பதிலக் காணொம். அணில வந்து என்னன்னு கேளுங்க.” கறீம் பாயிடம் கத்திக்கொண்டிருந்தாள்.

” நீ போயி பேசாம உன் வேலையைப் பாக்கப் போறீயா இல்லையா? ” என்று அதட்டினார் கறீம்பாய்.

விடிந்ததும் வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அணிலுக்கு அதிர்ச்சியாய் இருந்தது!

சிநேகமாய் சிரித்தபடி ஆடு நின்றிருந்தது!

காணாமல் போயிருந்த ஆடு கிடைத்த சந்தோஷத்தில் எல்லோருக்கும் கேட்கும் விதத்தில் ” ஆடு வந்திருச்சு! எல்லாரும் வாங்க, காணாமல்போன ஆடு வந்திருச்சு ”கத்தினாள்,அணிலின் அம்மா.

அணிலின் முகவாட்டத்தை தெரிந்து கொண்ட அணிலின் அப்பா கறீம்பாய் சொன்னார் ” அணிலு என்ன இருந்தாலும் நான் உன்னப் பெத்தவன். உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா? இவ்வளவு நாளா ஆட்டைப் பிரியாதவன் விடிஞ்சா பெருநாள் ஆடு காணமப் போயிருமா? உனது ஆட்டின் சிநேகத்தை நான் புரியாமலில்லை!

கவலையை விடு! புது துணி உடுத்தி வா நமாஸ்க்கு நேரமாச்சு” என்றதும்,

சந்தோஷத்தில் ஒரு குதி குதித்தான் அணில். ஏதோ புரிந்து கொண்டது போல் ஆடும் ஒரு குதி குதித்தது!

 

ஆதார்

 


நெளிந்து நெளிந்து வளைந்து நீண்டிருந்தது பொதுஜன வரிசை. ஆதார் புகைப்பட மையம் திறப்பதற்கு முன்னாலேயே காலங்காத்தாலே வந்து வரிசையிலே கடைசி ஆளா நின்றிருந்த லட்சுமியம்மாள் மெல்ல மெல்ல நகந்து இப்போது தான் புகைப்பட மைய வாசலைத் தொட்டிருந்தாள்!

லட்சுமியம்மாளுக்கு முன்னாடி இன்னும் பத்து பேர்கள் தான் இருப்பார்கள். " அம்மாடி! பெரிய மலையைத் தாண்டி வந்தாப்புல இருக்கு. கூட்டமா இது? அகூரமான கூட்டமப்பா! ” லட்சுமியம்மாள் தனக்குள் ஆச்சரியப்பட்டுக் கொண்டாள்.

பெய்யாத மழை சென்னை நகரம் முழுதும் பெய்து முடிஞ்சு, வெள்ளம் வடிஞ்சதிலேயிருந்து, ஒரு மாத காலமா வரிசை வரிசைன்னு வரிசையிலே நிண்டு நிண்டு காலும் தொடையும் ஏற்கெனவே ரணமாகியிருந்தது. பத்தாத குறைக்கு கட்டு போட்டிருந்த வலது கையும் விண்ணென்று வலிக்க ஆரம்பித்ததும், ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. லட்சுமியம்மாளுக்கு. .

வெள்ளத்துல பாதிச்சவங்களுக்கு புடவை தரதா கேள்விப்பட்டு டோக்கன் வாங்கி முடித்து, புடவை வாங்குவதற்காக  வரிசையில் நின்றாள்.

” எங்கள் ஆருயிர் அண்ணன் அஞ்சா சிங்கம் அண்ணன் மாவட்டச் செயலாளர் அண்ணன் இளமுருகு அவர்கள் வந்துவிட்டார். இதோ வந்துவிட்டார் ” விழா மேடையில் ஒருவா் மைக்கில் கூச்சிலிட்டதும் வெயிலில் வாடி வதங்கியிருந்த ஜனக்கூட்டம் திடீர் ஆவேசமாகி. தள்ளுமுள்ளானது.

மழை வெள்ளத்தில் தப்பித்துக் கொண்ட லட்சுமியம்மாள் புடவை வாங்க வந்த மக்கள் வெள்ளத்தில் வசமாக சிக்கிக்கொண்டாள். ”ஐயோ...ஐயோ..என் .கையி கையி ஐயோ ” பெருங்குரலெடுத்து கத்தியது ஜனக்கூட்டத்தில் ஒருவரின் காதுகளுக்கும் எட்டவில்லை.

நெரிசலில் தன் வலது கை ஒடிந்தது தான் மிச்சம்!. தன் சேலை முந்தானையின் ஒரு பகுதியை கிழித்து பக்கத்து டீக்கடையில் தண்ணி வாங்கி கிழித்த துணியை நனைத்து ஒடிந்த கையில் கட்டு கட்டிக்கொண்டு தாங்கமுடியாத வலியோடு ஆஸ்பத்திரிக்கு ஓடினாள்,

லட்சுமியம்மாளுக்கு மனசு பதறியது!

'இங்கேயும் வரிசையா? இவ்வளவு பேருக்குமா கை ஒடிஞ்சுபோச்சு? இத்தன பேருக்கும் என் நெலமையா?' விசாரித்தாள்.

வெள்ளத்துல விழுந்தது பாதி, சோத்து பொட்டலத்துக்கும் பிஸ்கெட் பாக்கெட்டுக்கும் நிண்டதுலயும், பாய்க்கும் போர்வைக்கும் அரிசிக்கும் நிண்டதுலயும் மீதி என்றும் தெரிந்து கொண்டாள்.

ஒருத்தன் அடிக்கொருதரம் ரெண்டுபேரு மூணுபேருன்னு ஆளுங்கள கூப்பிட்டு வந்து நிண்டிருக்கிற புற நோயாளிகள் வரிசையில முன்னாடி நிக்கவெக்கிறான்.

” ஏப்பா, நீ யாரு? நீபாட்டுக்கு ஆளுங்கள கொண்டு வந்து முன்னாடி நிக்க வெச்சுட்டு போறியே...வரிசையில நிக்கிற நாங்களெல்லாம் மனுசரா தெரியலையா?” லட்சுமியம்மாள் கேட்டுவிட்டாள்.

” என்ன கிழவி, என்ன ஒரேதா வாயி நீளுது? கம்முன்னு லைனுல்ல நின்னமா...நோவ பாத்தோமான்னு போகணும்.தெரியுதா? இங்க நான்தே வார்டுபாயி. டாக்டரே எவனும் என்ன கேள்வி கேட்கமாட்டானுங்க, புரியுதா? ”

பதிலுக்கு வாய் திறக்கவில்லை லட்சுமியம்மாள்.

டாக்டா், பக்கத்து சேரில் உட்கார்ந்து துண்டுச் சீட்டில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த வேறு ஒரு டாக்டரிடம் லட்சுமியம்மாளுக்கு புரியாத பாஷையில் எதையோ சொன்னார்.

திரைச்சீலை போல் வெள்ளைநிற காடாத்துணியால் மறைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் போடப்பட்டிருந்த தகரப்பெட்டில் படுக்கவைக்கப்பட்டாள், லட்சுமியம்மாள்.

' ஐயோ...அம்மா...வலி தாங்க முடியலையே... ' வலி வேதனைக் குரலாக வெடித்தது.

ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பிய லட்சுமியம்மாள், வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக பக்கத்து குடித்தனக்காரி எதிரே ஓடிவந்தாள்.

” ஆயா. வெள்ள நிவாரண பணத்துக்கு எழுத வந்தவங்கக் கிட்ட, நீங்க என் செல் நம்பரு கொடுத்திருந்தீங்கில்ல, உங்களோட பேங்க அக்கவுண்ட் நம்பா் அனுப்பச் சொல்லி என் செல்லுக்கு மெஸ்சேஜ் வந்திருக்கு”

பிடனி வலி போயி திருகு வலி வந்தது லட்சுமியம்மாளுக்கு.

வங்கிக் கணக்கு தொடங்க அரக்கப் பறக்க ஓடினாள்.

'மனுஷியா புறந்து. குடிகாரன கட்டிக்கிட்டு அஞ்சும் ஆணா பெத்து, என்னெத்த அனுபவிச்சே?, இதையாவதும் அனுப்பவின்னு தலையெழுத்து எழுதிருக்கோ' தனக்குள் சந்தேகப் பட்டுக் கொண்டாள்..   

”பெரியம்மா, அக்கவுண்ட் ஓப்பன் பண்ண முதியோர் பணம் வாங்குற பாஸ் மட்டும் போதாது. ஆதார் அட்டை வாங்கிட்டு வா”

”இப்படி ஒண்ணொண்ணா அலைய விடுறான்னுகளே... எடுபட்ட பயக இவனுகளுக்கு ஒண்ணும் வரமாட்டேங்குதே. இந்த எடுபட்ட சிருக்கிக்கும் ஒரு சாவு வந்து தொலைய மாட்டேங்குதே” தனது ஆத்தாமையை புலம்பினாள்.

உயிர் போயி உயிர் வந்தது லட்சுமியம்மாளுக்கு!

அதிகாலையிலிருந்தே வரிசையில் காத்திருந்த அவஸ்தை. ஒடிந்த கையில் ஏற்பட் ரணவலி லட்சுமியம்மாளை சுயநினைவுக்கு கொண்டு வந்தது!.

மீண்டும் ஒருமுறை வரிசையை தனக்கு பின்னாடி முன்னாடி பார்த்துக் கொண்டாள். இன்னும் கொஞ்சம் தான். நாலஞ்சு பேருங்க தான் இருப்பாங்க. பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

”ஏம்மா உனக்கு எத்தனவாட்டி சொல்றது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சிலிப்பு கொண்டுவா. இல்லையின்னா ஓட்டர் ஐ.டி. கொண்டுவா, எதுவுமே இல்லாம வந்தா எப்படி போட்டோ எடுக்க முடியும்?” என்று ஒரு பெண்ணுக்கு பதில் சொல்லிக் கொண்டே, கம்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள கேமராவுக்கு முன்னாடி அமர்ந்திருந்த சிருமியின் முகத்தை மானிட்டரில் தெரியும் பிரேமுக்குள் கொண்டு வந்தார். பிரேமுக்குள் அந்த முகம் கண்ணும் வாயும் பெருசாக அவரை பயமுறுத்தியது.

மீண்டும் அந்த பெண் ”சார்...சார்...” அவரை நச்சரித்தாள்.

”இந்தா பாரு,உனக்கு அவ்வளவு தான் மரியாதை. ஒழுங்கா இங்கிருந்து போயிரு.கோபத்தை கிளறாத”

”ச்சீ!...போ...புறம்போக்கு” திரும்பிப் பார்க்காமல் அந்தப் பெண் வெளியேறிப் போனாள்.

”யாரு புறம்போக்கு? கிட்ட வா யாரு புறம்போக்குன்னு பாத்திருலாம்”கூச்சலிட்டார்.

”சார், இவர நம்ம வட்டம் அனுப்பி வெச்சிருக்கார். பிரஸ்காரர் வேற. கொஞ்சம் வேலையை முடிச்சு அனுப்பிருங்க” வெள்ளையும் சொள்ளையுமா ஒருத்தர் சிபாரிசு செய்தார்.

”சரி சரி நீங்க போங்க”

”வராணுங்க பாரு. போட்டிருக்கிற சட்டையும் வேஸ்டியும் தான் வெள்ளை. செய்யுறது அத்தனையும் அழுக்கு!” தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டார்.

சிபாரிசோடு வந்திருந்த பிரஸ்காரர் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுத்து முடித்து எண்ரால்மெண்ட் சிலிப்பை பார்த்ததும் கொதித்துப் போனார்.

”யோவ்...நீ என்ன வேலை பாத்து கிழிச்ச? என் பேர் 'கனி'-க்கு பதிலா 'சனி'-ன்னு போட்டிருக்கே?”

”ஹலோ மரியாதையா பேசுன்னா மரியாதை கிடைக்கும். இல்லைன்னா நானும் பேசுவேன்”

” யோவ் உனக்கென்ன மரியாதை வேண்டிக்கிடக்கு? உன்னெ போயிட்டு வந்து வெச்சுக்குறேன்”

”போ போ, நீ யார வேணும்ணாலும் கூட்டிட்டு வா.” பதிலுக்கு ஆதார் போட்டோ எடுப்பவரும் சவால்விட்டார்.

”அடுத்து யாரு? உட்காருங்க !”

எதிரே அமர்ந்திருந்தவரின் முகத்தை பிரேமுக்குள் கச்சிதமாக கொண்டுவந்தார்.

”பேரு என்னம்மா?”

”லட்சுமியம்மாள்”

”வீட்டுக்காரர் பேரென்ன?”

”பழனிச்சாமி”

“அட்ரஸ் சொல்லு”

லட்சுமியம்மாள் சொல்லச் சொல்ல டைப் செய்து கொண்டார்.

”ரேகை பதியணும் கையக் காட்டுங்க”

கையைக் கண்டதும் கோபம் தலைக்கேறியது.

”ஏம்மா, என்னெ பாத்தா பைத்தியக்காரனா தெரியுதா?”

லட்சுமியம்மாள் புரியாது முழித்தாள்.

”கட்டுப்போட்ட கைய வெச்சுகிட்டு வந்திருக்கையே உனக்கு அறிவிருக்கா? கை விரலெல்லாம் பெருச்சாளிக் கெணக்கா வீங்கிப் போயிருக்கே...நான் எப்படி கை ரேகைய பதியுறது. போட்டோ எடுத்து எல்லா கருமாந்தரமும் பண்ணியாச்சு. இதை முதயே சொல்லி தொலைஞ்சிருக்கலாமுல. வெளியே போயி தொல சனியனே...சனியனே ”

”அப்படி சொல்லாதப்பா.விடியக் காலையிலேயிருந்து கஞ்சி தண்ணி குடிக்காம வங்கொலையா பட்டினி கிடந்து நிண்டிருந்தேன். ஆதார் அட்ட கொடுத்தாத்தான் எனக்கு வெள்ள நிவாரணப் பணம் கிடைக்கும்.கொஞ்சம் தயவு பண்ணுங்கய்யா”

சொல்லி முடித்ததும் அது நடந்தே விட்டது!

கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு போயி ஆதார் புகைப்பட மையத்திற்கு வெளியே தள்ளி விட்டார், குப்புற விழுந்ததில் ஒடிந்த கை மாட்டிக் கொண்டது. கழுத்தறுப்பட்ட கோழியாய் அங்கிட்டும் இங்கிட்டும்மாக புரண்டு  துடித்தாள், லட்சுமியம்மாள்.

ஒரு சலனமும்மின்றி நெளிந்து வளைந்து நீண்டிருந்தது பொதுஜன வரிசை!

உயிர்

 


சென்னை-வருசநாடு 163இ விரைவு பேருந்தில் பயணிகள் அனைவரும் தூங்கத்தொடங்கினர்.

என் மனசு இன்னமும் தவியாய் தவித்தது!

என் அம்மாவுக்கு என்னமும் ஆகியிருக்கக்கூடாது.

அம்மா...என்னுடன் சென்னையிலேயே நிம்மதியாக இருந் திருக்கலாம்.

என்னெ படிக்க வச்சு ....கல்யாணம் செய்து வச்சு... ஒரு தனியார் கம்பெனியில் டர்னர் வேலை கிடைத்ததால், அம்மா ஆசைப்பட்டது போல் எனக்கு நல்ல வாழ்க்கையும் அமைந்திருந்தது.

என் மனைவிக்கும், அம்மாவுக்கும் அடிக்கடி ஏற்பட்ட மாமியார் மருமகள் சண்டையில்,ஒரு முறை நான் குறுக்கிட வேண்டிய தாகிவிட்டது.

“ என்னங்கம்மா உங்களோட ஒரே எழவாப் போச்சு” கோபத்தில் திட்டிவிட்டேன். உடனே துணிமணிகளை மூட்டை கட்டிக்கொண்டு, எங்கள் சொந்த ஊரான மயிலாடும்பாறைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

ஊரிலிருந்து என்னுடைய வகுப்புத் தோழன் ஜெயராஜ் தான் நான் வேலை செய்யும் கம்பெனிக்கு போன் செய்து, உன் அம்மா உடம்புக்கு முடியாம கிடக்குறாங்க, உடனே புறப்பட்டுவான்னு தகவல் சொன்னான்.

அம்மா, ஊருல குடியிருந்தாலும் எப்பவுமே என் நினைப்புதான்!.

என்னெ படிக்கவைக்க அவ பட்ட பாடு...கண் கொண்டு பாக்க முடியாது.

எனக்கு சத்தம் போட்டு அழுது தீர்க்கணும் போலிருக்குது.

எனக்கு வட்டியில சோறு வைக்கும்போதெல்லாம் அவ கையப் பாத்திருக்கேன். கையெல்லாம் கோடு கோடாக, பாளம் பாளமாக கீரல் விழுந்திருக்கும். காயிந்துபோன பருத்தி செடிக கீருண காயங்கள் இருக்கும். சோத்துல குழம்பு ஊத்தி அவ சாப்பிடும்போது, அடிக்கடி கையை அவள் வாயருகே வைத்துக்கொண்டு ஊதிக்கொள்வாள். கை எரிச்சலில் அவதிப்படுவாள்.

தீபாவளி தைப்பொங்கல்ன்னு ஊரே நல்ல நாள் கொண்டடுனாக் கூட, என் அம்மா அன்னிக்கும் வேலை கிடைக்குமா? என்று தான் தெருஞ்சவங்க கிட்ட விசாரிப்பாள்.

எங்கிட்டே அடிக்கடி சொல்லுவா... “டேய்! கண்ணா, எனக்கு விவரம் தெருஞ்ச நாளுள இருந்தே எங்கம்மாவ, அப்பாவ நான் பாத்ததில்ல. எங்க அம்மா கருப்பா சிவப்பான்னு கூட எனக்கு தெரியாது. சின்ன வயசிலிருந்தே  நான் அனாதையா சீரழிஞ்சவடா, இப்போ உங்கப்பாவையும் பறிகொடுத்துட்டு நிக்கிறேன்.

நீயாவது நல்லா இருக்கணும்.படிச்சுமுடிச்சு ஒரு வேலையில சேர்ந்து,கைநிறையா சம்பாதிக்கணும்.சந்தோசமா நிறைஞ்ச குடும்பமா தளைக்குனும்டா. என் கஷ்டம் என்னோடவே முடிஞ்சுடனும்டா கண்ணா. என்னோட பாடெல்லாம் என்னோடவே போயிடனும்.” புலம்பி தவிப்பா.கிறுக்கியா அலையுவா.

அன்னக்கி, நான் அப்படி அம்மாகிட்ட கொவிச்சிருக்க கூடாது. தேனிஐ.டி.ஐ.யில் டர்னர் பிரிவில் படிச்சிட்டிருந்தேன். சனிக் கிழமை,ஞாயிற்றுக்கிழமை எனக்கு வார விடுமுறை.வாரம் வாரம் எங்க ஊர் மயிலாடும்பாறைக்கு போய் வருவேன்.

எஜூகேசனல் டூர் போறதுக்காக அம்மாகிட்ட ரெண்டாயிரம் ரூவா பணம் கேட்டிருந்தேன் (யாருக்கிட்டயாவது கடன் வாங்கி தான் ).பணம் தரல.பிடிவாதம் செஞ்சும் பார்த்தேன்.

அம்மா, இந்த டூர் எனக்கு முக்கியம்மா.பாதி செலவு அரசாங்கம் ஏத்துக்கும்.பாதி செலவு தான் நம்மளோடது.ஒரு வாரம் வெளி ஊர் டவுனெல்லாம் சுத்திப் பாக்கலாமாம்.மெட்ராஸ் ,ஓசூர்,பெங்களூர், இன்னும் பெரிய பெரிய தொழில் நகரங்கள்,லிமிடெட் கம்பெனிகள், எங்கஐ.டி .ஐயில இல்லாத ஆட்டோமேட்டிக் லேத் வகைகள் எல்லாம் பக்க்கலாமாம்.

கட்டிங்மெஷின், பெரியபெரிய ஷேப்பிங் மெஷின், டிரிலிங் மெஷின்,மில்லிங் மெஷின், இன்னும் நிறையா மெஷின் னெல்லாம் பக்கலாமாம் என்றெல்லாம் சொல்லி பணம் கேட்டு அழுது முரண்டு பிடித்து பாத்துட்டேன்.அம்மா கொஞ்சம் கூட ஒத்துப்பட்டு வரல. நான் வீட்டை விட்டு கோவிச்சுக்கிட்டு தேனி ஐ.டி.ஐக்கு வந்துட்டேன்.

யாருகிட்டவோ ரெண்டாயிரம் கந்து வட்டிக்கு வாங்கிக்கிட்டு உடனே புறப்பட்டு தேனி பஸ் ஸ்டாண்டுல இறங்கி இடம் தெரியாம அலஞ்சு ஒலைஞ்சு கிறங்கி கிறுகிறுத்துப்போய் ஐ.டி.ஐக்கு வந்துசேர்ந்தாங்க.

“சார் பஸ் கால்மணி நேரம் நிக்கும். டீ,காப்பி,டிபன்,சாப்பாடு சாப்பிடுறவங்க சாப்பிடலாம்” என்று மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போல திரும்ப திரும்ப கத்திக் கொண்டிருந் தான் ஒரு சிறுவன். பஸ்ஸில் இருந்த எல்லோரும் இறங்கிக் கொண்டார்கள்.எனக்கு இறங்க மனம் ஒப்பவில்லை.

என்மடியில் பயணக்களைப்பில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் என் மனைவி.

அம்மாவ நினைக்க நினைக்க பதறிப்போகிறது என் உசுறு!

இருவது வருசமிருக்கும், பயங்கர மழை. ஆத்துல பயங்கர வெள்ளம் கரைபுரண்டு வந்தது. ஆத்துக்கும் கோபம் வந்து அதனுடைய முழு பலத்தையும் காட்டுனா எப்படி இருக்கும்? அந்த ஆத்த கடக்க பாலம் கிடையாது. எங்க ஊரு ஜனங்க ஆத்தக்கடந்து தான் காட்டு வேலைக்கு போயாகனும்.

ஆத்துல வெள்ளம் வரும் போதெல்லாம்...ஜனங்கள ஆத்துவெள்ளம் இழுத்துக்கிட்டு போகும். ஆடு,மாடுகள் ளெல்லாம் வெள்ளத்துல மிதந்து போகும்போது ஆடு மாடுக “ம்மா...ம்மா...ம்மான்னு கத்தும்போது கரையில் நிக்கிறவங் களுக்கு கண்ணீர் வரும்.

ஜனங்கள வெள்ளம் இழுத்துப் போகும் போது “காப்பாத்துங்க...  காப்பாத்துங்க...”ன்னு ஜனங்க கத்துறத காதால் கேட்க முடியாது. கண்கொண்டு பாக்கமுடியாத கொடூரம் சோகம் அந்த காட்சிய பார்த்தவங்க பல பேருக்கு புத்தி பேதலிச்சு போயிருக்கு. அந்த வெள்ளத்துல என்னோட அம்மாவும் போயிட்டாங்க. ஊரே கூடி எங்கேயாவது கரை ஒதிங்கி கிடக்காங்களான்னு தேடிப்பார்த்தோம்.காணல. மறுநாள் எப்படியோ கரையொதுங்கி உயிரோட வீடு வந்து சேர்ந்தாங்க.

என்ன உசுறோ...இனி கட்டையில போனாக்கூட  இது வேகாதுன்னு ஊரே ஆச்சிரியப்பட்டுபோச்சு.

அம்மாவ, நினைக்கையில எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது!.அழுகையை அடக்க இயலவில்லை.

நானும் என் மனைவியும் தெருமுனையில் நுழையும்போதே ஆண்களும் பெண்களும் முதியவர்களும் எல்லோரும் ஓடிவந்து, எங்களை கைதாங்கலாக அழைத்து சென்றார்கள்.

“பாவம் தம்பி உங்க அம்மா, உங்களுக்கு கல்யாணமாகி ரெம்ப வருசமா குழந்தை இல்லையின்னு, நம்ம ஊரு முருகன் கோயிலுக்கு ஆடி கிருத்திகைக்கு தலையில தேங்காய் உடைக்கிறதா நேந்துகிடுச்சாம். நேத்து தலையில தேங்காய் உடைக்கையில உங்க அம்மாவுக்கு மண்டை ரெண்டா ஓடைஞ்சிருச்சு.பாவம் நெஞ்சு குழிக்கும் தொண்டை குழிக்குமா உசுறு போகாம கிடந்து கஷ்டப்படுது.நீங்க புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேரும் சேர்ந்து சீக்கிரமா தொண்டைக்குழியில பால் ஊத்துங்க.அப்ப தான் உசுறு போகும்" என்றார்கள்.

என் உயிர் மருத அம்மாவைப் பார்த்தபடி பால் கிண்ணத்தைக் கையில் எடுத்தேன்!

#Republic day of india 2024#shortsvideo